பொருளடக்கம் பக்கம் செல்க


cOmEcar mutumozi veNpA
of civanjAna munivar
(in tamil script, unicode format )

சோமேசர் முதுமொழி வெண்பா
(ஆசிரியர்: சிவஞான முனிவர் )

சோமேசர் முதுமொழி வெண்பா
(ஆசிரியர் : சிவஞான முனிவர்)

அதிகாரத்திற்கு ஒன்றாக 133 திருக்குறளை உள்ளீடுகொண்ட நீதி நூல்

காப்பு

மதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர்
முதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும்
மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங்
கடம்பொழி முக்கட் களிறு.

1. கடவுள் வாழ்த்து

சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற்
சோரவிலடை யாற்றௌிந் தோஞ் சோமேசா - ஓரில்
அகர முதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே உலகு

2. வான்சிறப்பு

நேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன்
துயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

3. நீத்தார் பெருமை

அத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச்
சுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

4. அறன்வலியுறுத்தல்

தக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந்
தொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்க
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.

5. இல்வாழ்க்கை

இல்வாழ் தரும னியற்சந் திரசேனன்
தொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்ல
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.

6. வாழ்கைத்துணை நலம்

மூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள்
தூய அனுசுயை சோமேசா - மேவுபிற
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

7. புதல்வரைபெறுதல்

பாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ்
சூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில்
தம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.

8. அன்புடைமை

தோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்து
தோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

9. விருந்தோம்பல்

பொன்னனையா ளன்பருக்கே போனகமீந் துன்னருளாற்
சொன்னமிகப் பெற்றாளே சோமேசா - பன்னில்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.

10. இனிவை கூறல்

இன்சொ லிராம னியம்பவி ரேணுகைசேய்
துன்பமொழி யே புகன்றான் சோமேசா - அன்புடைய
இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

11. செய்நன்றி அறிதல்

பன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல்
சொன்னாளே ஔவை முன்பு சோமேசா - மன்னாத்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த்
கொள்வர் பயன்தெரி வார்.

12. நடுவு நிலைமை

வேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச்
சோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

13. அடக்கமுடைமை

எல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால்
யாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால்
சொகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

14. ஓழுக்கமுடைமை

தீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன்
துயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின்
ஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

15. பிறனில் விழையாமை

ஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்
தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்ற
பகைபாவ மச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

16. பொறையுடைமை

ஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார்
சுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட
ஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்கு
பொன்றுந் துணையும் புகழ்.

17. அழுக்காறாமை

அன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற்
துன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம்
அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

18. வெஃகாமை

நின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறை
துன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில்
நடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.

19. புறங்கூறாமை

கூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளே
தூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானே
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தோறா தவர்.

20. பயனில சொல்லாமை

சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே
துக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற்
பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

21. தீவினையச்சம்

குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்
சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

22. ஒப்புரவறிதல்

பண்டைநிலை வெண்ணிநொந் தார்பாகஞ் செய்மாறராந்
தொண்டர் மனைவியர் சோமேசா - கண்டோம்
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர்மை
செய்யா தமைகலா வாறு.

23. ஈகை

மீளென் றுரைப்பளவு மிக்குவகை பெற்றிலர்வன்
தோளர் இயற்பகையார் சோமேசா - நீளுலகில்
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.

24. புகழ்

போதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத்
தூசிலாக் கீர்த்திகொண்டான் சோமேசா - ஆசையுடன்
ஈத லிசைபட வாழ்த லதுவல்லது
ஊதிய மில்லை யுயிர்க்கு.

25. அருளுடைமை

மூர்த்திபால் வன்கண்மை மூண்டவடுகரசன்
சூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்த
பொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார்
அற்றார்மற் றாத லரிது.

26. புலால் மறுத்தல்

மச்சஞ் சுமந்துய்ப்ப வானோர் பணிகொண்டான்
துச்சனாஞ் சூரபன்மன் சோமேசா - நிச்சயமே
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

27. தவம்

ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்
தூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

28. கூடாவொழுக்கம்

மாயனவ்வே டங்கொண்டே வன்சலந் தரன்கிழத்தி
தூயநலங் கவர்ந்தான் சோமேசா - ஆயின்
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.

29. கள்ளாமை

நாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்
தூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்
எள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்
கள்ளமை காக்கதன் நெஞ்சு.

30. வாய்மை

பிள்ளையுட னுண்ணப் பேசியழைத் தாரன்பு
துள்ளுசிறுத் தொண்டர் சோமேசா - உள்ளுங்காற்
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

31. வெகுளாமை

பல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்
தொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்ல
இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

32. இன்னா செய்யாமை

பிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத்
துள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப்
பிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.

33. கொல்லாமை

வேந்துமகற் றேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான்
சோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - ஆய்ந்துணர்ந்தோர்
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீங்கும் வினை.

34.நிலையாமை

ஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத்
தூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில்
நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

35. துறவு

கோவணமொன் றிச்சிப்பக் கூடினவே பந்தமெல்லாந்
தூவணஞ்சேர் மேனியாய் சோமேசா - மேவில்
இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து.

36.மெய்யுணர்தல்

காதிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச்
சோர்விழந்துய்ந் தாரரசர் சோமேசா - ஓருங்காற்
காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.

37. அவாவறுத்தல்

தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது
தூயபிற வாமையொன்றே சோமேசா - வாயதனால்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

38. ஊழ்

முன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந்
துன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற்
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.

39.இறைமாட்சி

பார்சீதை சீலம் பழித்துரைத்துங் காகுத்தன்
சோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரிற்
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு முலகு.

40. கல்வி

சம்பந்தர் நாவரசர் பாற்கண்டோஞ் சார்ந்துவப்ப
தும்பிரிவி னுள்ளுவதுஞ் சோமேசா - நம்பி
உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

41. கல்லாமை

மெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார் கல்விநலந்
துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார் சோமேசா - உய்த்தறியின்
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.

42. கேள்வி

ஊனுக்கூ னென்னு முரைகண் டுவந்தனரே
தூநற்சீர்க் கண்ணப்பர் சோமேசா - ஆனதனாற்
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்கு
ஒற்கத்தி னூற்றாந் துணை.

43. அறிவுடைமை

அன்றமணர் தீவைப்ப அஞ்சியதென் என்னன்மின்
துன்றியசீர்ச் சம்பந்தர் சோமேசா - நன்றேயாம்
அஞ்சுவ தஞ்சாமைபேதைமை யஞ்சுவது
அஞ்ச லறிவார் தொழில்.

44. குற்றங்கடிதல்

ஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச்
சூரந் தொலைந்தானே சோமேசா - ஓரின்
வருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

45. பெரியோரைத் துணைகோடல்

எத்திறமும் ஏயர்கோன் நட்பாமா றெண்ணணினரே
சுத்தநெறி ஆரூரர் சோமேசா - வைத்த
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

46. சிற்றினஞ் சேராமை

அற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள்
சொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.

47.தெரிந்து செயல்வகை

சானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனே
தூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.

48. வலியறிதல்

சக்கரத்தை யேற்பன் சலந்தரனா னென்றெடுத்துத்
துக்கமுற்று வீடினனே சோமேசா - ஒக்கும்
உடைத்தம் வலியறியா ரூக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

49. காலமறிதல்

வீமனவை முன்மனையை வேட்டானைக் கண்டுமொரு
தூமொழியே னும்புகலான் சோமேசா - ஆமென்றே
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

50. இடனறிதல்

காட்டு முயலுங் கதக்கரியைக் கொல்லுமாற்
தோட்டலர்நீர்க் கச்சியினுட் சோமேசா - நாட்டியிடின்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்.

51. தெரிந்து தௌிதல்

தோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான்
சூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல்
தேரான் பிறனைத் தௌிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.

52. தெரிந்து வினையாடல்

தேசிகனாக் கொண்ட சுரரிறைக்குத் தீங்கிழைத்தான்
தூசார் துவட்டாச்சேய் சோமேசா - பேசில்
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்.

53. சுற்றந்தழால்

ஆர்வீ டணனோ டளவளா வாதரக்கன்
சோர்விலா வாழ்விழந்தான் சோமேசா - நேரே
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

54. பொச்சாவாமை

முப்புரத்தோர் வேவ உடனிருந்த மூவரே
துப்பினாற் கண்டறிந்தார் சோமேசா - வெப்பால்
இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

55. செங்கோன்மை

மைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான்
சுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.

56. கொடுங்கோன்மை

ஏவரில் லாளழுத வன்றேகண் டேக்குற்றார்
துய்யகங்கை சேய்முதலோர் சோமேசா - மெய்யேயாம்
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

57. வெருவந்த செய்யாமை

வெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்
தொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி யாங்கே கெடும்.

58. கண்ணேட்டம்

மாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்
தோலா விடமுண்டாய் சோமேசா - சால
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

59. ஓற்றாடல்

வேதனில்லாள் வீழ்ந்ததிற மீனவற்கு நீதெரித்தாய்
சோதிபழி யஞ்சுஞ் சோமேசா - பூதலத்தின்
எல்லார்க்கு மெல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்.

60. ஊக்கமுடைமை

வெங்கரியைப் பாகரைமுன் வீட்டினா ரேகராய்த்
துங்க எறிபத்தர் சோமேசா - அங்கம்
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

61. மடியின்மை

பொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னி
தொன்மைவலி யாண்மையினாற் சோமேசா - பன்னின்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

62. ஆள்வினையுடைமை

கூற்றுவர் மூவெந்தர் நிலமுங்கைக் கொண்டாரே
தோற்றுதா ளாண்மையினாற் சோமேசா - சாற்றும்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

63. இடுக்கண்ணழியாமை

என்றுமொரு மீனேவந் தின்மைிக வுந்தளரார்
துன்றேர் அதிபத்தர் சோமேசா - மன்ற
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

64. அமைச்சு

கால்சேய் கதிர்சேயை காத்தரசன் நட்புதவித்
தூலமுடி சூட்டுவித்தான் சோமேசா - சாலப்
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லதமைச்சு.

65. சொல்வன்மை

நித்தியத்து வங்கோட்பான் நித்திரையென் றேமயக்கந்
துய்த்தனனாங் கும்பகன்னன் சோமேசா - எத்திறத்தும்
ஆக்கமும் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பற் சொல்லின்கட் சோர்வு

66. வினைத்தூய்மை

தக்கனுனை யெள்ளிமகஞ் சாடும்போ தெண்ணியெண்ணித்
துக்கமுற்றான் ஆவதென்னே சோமேசா - எக்காலும்
எற்றென்னிரங்குவ செய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று

67. வினைத்திட்பம்

செவ்வேளைப் பாலனென எள்ளத் திறலழிந்தான்
துவ்வாத வெஞ்சூரன் சோமேசா - அவ்வாறு
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி யன்னாருடைத்து.

68. வினைச்செயல்வகை

வெள்ளிவெற்பை யெண்ணா தெடுப்பனெனவீறெய்தித்
துள்ளியழிந் தானரக்கன் சோமேசா - மெள்ள
முடிவு மிடையூறுந் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

69. தூது

தன்துயர் நோக்கான் தனைவிடுத்தோர்க் கேயுறுதி
துன்றமொழிந் தாநிடதன் சோமேசா - என்றும்
இறுதி பயப்பினும் எஞ்சா திறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது.

70. மன்னரைச்சேர்ந்தொழுகல்

மாமனா னென்னு மதத்தா லுனையிகழ்ந்து
தோமுற்றார் தக்கனார் சோமேசா - வாமே
பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.

71. குறிப்பறிதல்

அப்பூதி யார்மறைத்தும் வாகீச ரக்கரவைத்
துப்பானறிந்தனரே சோமேசா - இப்புவியில்
ஐயப் படாஅ தகத்த துணர்வானை
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

72. அவையறிதல்

ஓர்சங்கத் தார்கல்வி யூமைச்சேய்க் குங்காட்டிச்
சோர்வுநலந் தேர்ந்தனரே சோமேசா - ஓருங்காற்
கற்றறிந்தார்க் கல்வி விளக்குங் கசடறச்
சொற்றெறிதல் வல்லா ரகத்து.

73. அவையஞ்சாமை

வாழ்வாத வூரர் வளவனவை முன்னெதிர்த்துச்
சூழ்தே ரரைவென்றார் சோமேசா - தாழ்வகல
ஆற்றி னளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

74. நாடு

மேல்வளமெல் லாமமைந்தும் வீர மகேந்திரந்தான்
தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா - ஞாலமிசை
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

75. அரண்

வல்லதிகன் றன்னரணம் வான்வளவன் சேனைசெலத்
தொல்லைவலி மாண்டதே சோமேசா - நல்ல
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்க ணில்லா தரண்.

76. பொருள் செயல்வகை

உக்கிரனார் மேருவைவென் றொண்ணிதியம் பெற்றமையாற்
றொக்ககுடி காத்தனர்காண் சோமேசா - மிக்குயர்ந்த
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.

77. படைமாட்சி

நீநகைப்ப முப்புரமு மீறாகி மாய்ந்ததே
தூநகையாள் பாலமருஞ் சோமேசா - வானின்
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.

78. படைசெருக்கு

மன்மதனின் னோடெதிர்த்து வீறழிந்து மாண்டாலுந்
துன்னுபுக ழேபெற்றான் சோமேசா - புன்னெருங்குங்
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.

79. நட்பு

வாக்கரசர் பிள்ளா யெனவலித்து மாற்றலுற்றார்
தூக்குபிள்ளை யார்செலவைச் சோமேசா - நோக்கி
நகுதற் பொருட்டன்று நட்டலா மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.

80. நட்பாராய்தல்

போற்றுஞ் சுசீலன் புயபெலனை நீத்தகன்றான்
தோற்றிறைவி தும்மிடவுஞ் சோமேசா - ஏற்றதே
ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரீஇ விடல்.

81. பழைமை

இல்லாளைப் பற்றிமூழ் கென்றிடவும் அன்புகுன்றார்
தொல்லைநெறி நீலகண்டர் சோமேசா - ஒல்லாது
அழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

82. தீநட்பு

ஆங்கா ரியந்தடுத்த அங்கனைசொற் கேட்டிறந்தான்
தூங்காத் தசரதன்றான் சோமேசா - ஈங்கிதனால்
ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

83.கூடாநட்பு

தாய்தீண்டத் தூசுடுத்துச் சாரெனுஞ்சொற் றீதென்றாள்
தூய சுயோதனற்குச் சோமேசா - வாயதனால்
நட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை யுணரப் படும்.

84. பேதைமை

வன்சமணர் தம்பிரிவால் வாகீசர்க் கின்பமின்றித்
துன்பமென்ப தில்லையோ சோமேசா - நன்காம்
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில்.

85. புல்லறிவாண்மை

இல்லாள் மறுப்பவுஞ்சென் றேகிச் சலந்தரன்றான்
தொல்வலிபோய் மாண்டனனே சோமேசா - வல்லமையால்
ஏவவுஞ் செய்கலான் றான்றொறு னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்.

86. இகல்

எத்திறத்துங் கெட்டா னிகலாற் சுயோதனன்சீர்
துய்த்தனனட் பாற்றருமன் சோமேசா - மொய்த்த
இகலானா மின்னாத வெல்லா நகலானா
நன்னை மென்னுஞ் செருக்கு.

87. பகைமாட்சி

ஏனையார்பால் வெற்றிகொண்டா னின்னோ டெதிர்த்திறந்தான்
தூநறும்பூ வாளியான் சோமேசா - மான
வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார் மென்மேக பகை.

88. பகைதிறந்தௌிதல்

நந்திக் கலம்பகத்தான் மாண்டகதை நாடறியுஞ்
சுந்தரஞ்சேர் தென்குளத்தூர்ச் சோமேசா - சந்ததமும்
வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.

89. உட்பகை

மாற்றார் முடியும் வளமையுங்கொண் டேகநலந்
தோற்றான் வழுதிமகன் சோமேசா - ஆற்றலிலா
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்
உட்பகை யுள்ளதாங் கேடு.

90. பெரியாரைப்பிழையாமை

கொன்படைக ணீறாகக் கோசிகனார் சாபத்தால்
துன்பமுற்றார் நால்வேந்தர் சோமேசா - இன்புதவும்
ஏந்திய கொள்கையர் சீறினிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

91. பெண்வழிச்சேரல்

கற்பின்மை யில்லாள்பாற் கண்டுமய லுற்றழிந்தான்
சொற்புண்ட ரீகாக்கன் சோமேசா - பொற்பெண்ணி
இல்லாள் கட்டாழ்ந்த இயல்பின்மை யெஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

92. வரைவின் மகளிர்

வேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனே
தூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும்
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

93. கள்ளுண்ணாமை

தக்கன்பான் ஞானத் ததீசியுப தேசமெல்லாம்
தொக்கதனா லானதென்னே சோமேசா - மிக்குக்
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

94. சூது

முற்பணயத் தாற்பின்னு மூண்டிழந்தார் சூதரொடு
சொற்படுஞ்சூ தாடினோர் சோமேசா - அற்பமாம்
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கு முண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு.

95. மருந்து

நல்ல திலகவதி யார்மொழியை நம்பிவெந்நோய்
சொல்லரசர் தீர்ந்துய்ந்தார் சோமேசா - புல்லிய
நோய்நாடி நோய்முத னாடியது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

96. குடிமை

மங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார்
துங்கமறைதேர் கலயர் சோமேசா - அங்கண்
வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைபிரித லின்று.

97. மானம்

அச்சுவத்த மாப்பட்டா னென்ன அமர்துறந்தான்
துச்சி றுரோணனென்பான் சோமேசா - நச்சு
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.

98. பெருமை

தண்டி யடிகளிரு தாளிணைபே ணாதழிந்தார்
தொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா - மிண்டுஞ்
சிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.

99. சான்றாண்மை

வன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறைமீட்டான்
தொன்மை நெறித்தருமன் சோமேசா - பன்முறையும்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

100. பண்புடைமை

உன்பணிக்கென் றோதிநல்காச் செல்வ முத்தியுறத்
துன்பமுற்றார் நால்வணிகர் சோமேசா - வன்புமிகும்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று

101. நன்றியில் செல்வம்

எல்லா மறையவர்க்கீந் தேவறியன் போலானான்
சொல்லாருங் கீர்த்திரகு சோமேசா - நல்லதே
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து

102.நாணுடைமை

புண்ணொடு உயிர்வாழ நாணியுயிர் போக்கினான்
துண்னெனவே வாலிமுனஞ் சோமேசா - எண்ணியிடில்
நாணா லுயிரைத் துரப்ப ருயிர்ப்பொருட்டால்
நாண்டுறவார் நாணாள் பவர்

103. குடிச்செயல்வகை

மற்றிருத ராட்டிரன்சந் தானமெலா மாய்ந்ததே
சுற்றுநீர் தென்குளத்தூர்ச் சோமேசா - பற்றும்
இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும்
நல்லா ளிலாத குடி

104. உழவு

வேள்வித் தொழிற்கு முழுதொழின் முன்வேண்டுமால்
சூழிசூழ் தென்குளத்ததூர்ச் சோமேசா - வாழும்
உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை.

105. நல்குரவு

நற்றருமன் வெற்றியினை நாடி விராடனெதிர்
சொற்றமொழி சோர்ந்ததே சோமேசா - கற்றறிவால்
நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

106. இரவு

கஞ்சாறர் சோபனப்பெண் கூந்தல் கடிதளிக்கத்
துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா - நெஞ்சின்
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்துள்ளம்
உள்ளு ளுவப்ப துடைத்து.

107. இரவச்சம்

எண்ணெயிரப் பஞ்சியுட லேவருத்தித் தீபமிட்டார்
துண்ணென் கணம்புல்லர் சோமேசா - கண்ணியிடில்
ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்கு
இரவி னிளிவந்த தில்.

108. கயமை

ஏற்ற துரோணனையன் றெள்ளித் துருபதன்பின்
தோற்று விசயர்க்களித்தான் சோமேசா - போற்றிடினும்
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லாத வர்க்கு.

109. தகையணங்குறுத்தல்

வாய்ந்ததம யந்தியுரு மாணலங்கண் டின்புற்றான்
தோய்ந்தபுக ழாளுநளன் சோமேசா - ஆய்ந்துரைக்கின்
உண்டார்க ணல்ல தடுநறாக் காம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.

110. குறிப்பறிதல்

காங்கேயன் வேண்ட வெறுத்துரைத்தாள் கானவர்மின்
தூங்கா வளக்குளத்தூர் சோமேசா - ஆங்கண்
உறாஅ தவர் போல் சொல்லினுஞ் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப்படும்.

111. புணர்ச்சி மகிழ்தல்

மெய்தவத்தைக் காசிபனும் விட்டொழிந்து மாயைபாற்
சுத்தமனம் வைத்தானே சோமேசா - இத்தலத்தில்
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணானுலகு.

112. நலம்புனைந்துரைத்தல்

ஈன்றான் திலோத்தமையை யிச்சிக்கி லாங்கவள்மெய்
தோன்றுமெழி லென்சொல்வேன் சோமேசா - ஆன்ற
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வெய்த்தோ ளவட்கு.

133. காதற்சிறப்புரைத்தல்

கானடைந்துஞ் சீதைகலப் பாற்களித்தான் பின்னயர்ந்தான்
தூநீ ரயோத்தியர்க்கோன் சோமேசா - ஆனதனால்
வாழ்த லுயிர்கன்ன ளாயிழை சாதல்
அதற்கன்ன ணீங்கு மிடத்து.

114. நாணுத்துறவுரைத்தல்

காம மிகவுழந்துற் தூதைக் கடிந்து விட்டாள்
சோமநுதற் பரவை சோமேசா - ஆமே
கடலென்ன காமமுழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.

115. அலரறிவுறுத்தல்

ஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறை
சோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற்
கண்டது மன்னு மொருநாள லர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.

116. பிரிவாற்றாமை

வாழ்விழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்குநொந்தான்
சூழ்ச்சியை முன்பிரிந்து சோமேசா - வீழ்வார்கட்கு
இன்னா தினனில்லூர் வாழ்த லதனிலும்
இன்னா தினியார்ப் பிரிவு.

117. படர்மெலிந்திரங்கல்

இன்பமுற்றான் மாயைதோள் தோய்ந்துபின் னெண்மடங்கு
துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா - அன்புடையார்க்கு
இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்
றுன்ப மதனிற் பெரிது.

118. கண்விதுப்பழிதல்

தாதையன்றித் தானேதுச்சந்தனைச்சேர்ந் தின்னலுற்றாள்
சூதில் சகுந்தலைதான் சோமேசா - ஓதிற்
கதுமெனத் தானோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

119. பசப்புறு பருவல்

கேழ்வரைச் சேடியர்கொல் கீழ்மைக் கியற்படுஞ்சொற்
சூழ்பமின்னார் துன்பத்துஞ் சோமேசா - தாழ்வில்
பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
நல்காமை துற்றா ரெனின்.

120. தனிப்படர்மிகுதி

பன்முநிவர் பன்னியர்கள் பண்டுன்னைக் காமமுறவுந்
துன்னியருள் செய்திலையே சோமேசா - அன்னதே
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.

121. நினைத்தவர் புலம்பல்

தன்னையே யுன்னுந் தமயந்தி மாதைநளன்
துன்னார்போல் நீத்திருந்தான் சோமேசா - அன்னதே
தந்நெஞ்சத் தெம்மைக் கடிகெண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல்.

122. கனவுநிலையுரைத்தல்

அல்லமனை மாயை கனவி லணைந்ததனாற்
சொல்லறிய இன்பமுற்றாள் சோமேசா - நல்ல
நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதெ யினிது.

123. பொழுதுகண்டிரங்கல்

வானவர்கோன் காமநோய் மாலைவர மிக்கதே
தூநீர்ப் புளினத்திற் சோமேசா - வானதே
காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

124. உறுப்பு நலனழிதல்

ஓதாநா ளோதுகலை ஒத்திளைத்தாள் சீதையென்றான்
சூதரா வான்மீகி சோமேசா - கோதில்
பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

125. நெஞ்சொடுகிளத்தல்

அன்பன் துறப்பவு நாளா யினிதேடித்
துன்பந் தலைக்கொண்டாள் சோமேசா - முன்பே
இருந்துள்ளி யென்ப ரிதனெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்க ணில்.

126. நிறையழிதல்

கோற்றொடிவிற்பாய்போன்று கூடல் வணிகமின்னார்
தோற்றுநிறை யழித்தாய் சோமேசா - சாற்றுங்காற்
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.

127. அவர்வயின் விதும்பல்

சந்திரசே னன்வரவு நோக்கியுயிர் தாங்கினளாற்
சுந்தரச்சீ மந்தினிதான் சோமேசா - முந்தும்
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன்.

128. குறிப்பறிவுறுத்தல்

சங்கிலிபாற் லாரூர ரூழிகணந் தானாகத்
துங்கமிகும் அன்புவைத்தார் சோமேசா - பொங்கப்
பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

129. புணர்ச்சிவிதும்பல்

யோசனை கந்தியினைக் காண்டலும்பே ரோகைகொண்டான்
தூசனையாச் சந்தனுத்தான் சோமேசா - நேசமுடன்
உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

130. நெஞ்சொடுபுலத்தல்

விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றுந் தேடிநொந்தாள்
தொக்க வுருப்பசிமின் சோமேசா - ஓக்கும்
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவநெஞ்சே
நீயெமக் காகா தது.

131. புலவி

கொண்ட பரவை கொடும்புலவி யெல்லாம்வன்
றொண்டர்க்குப் பேரழகே சோமேசா - தண்டா
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.

132. புலவிநுணுக்கம்

சீவகன் மஞ்சரியைத் தாழ்ந்துரைப்பச் சீறினளே
தூவாய்குணமாலை சோமேசா - ஆவகையே
தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்
இந்நீர ராகுதி ரென்று.

133. ஊடலுவகை

காயும் புலவியில் வன்தொண்டர் கடைபட்டுத்
தோயுமின்பின் மேலானார் சோமேசா - ஆயுங்கால்
ஊடலிற் தோற்றவர்வென் றாரது மன்னுங்
கூடலிற் காணப் படும்.